Saturday, December 20, 2014

தமிழ் வகுப்பில் எந்த அளவு ஆங்கிலம் பயன்படுத்தலாம்

புலம்பெயர் நாடுகளில் நடக்கும் தமிழ்ப் பள்ளிகளில் சேவை செய்யும் ஆசிரியர்கள்

  • தமிழ் வகுப்பில் தமிழில்தான் பேச வேண்டுமா?
  • ஆங்கிலம் பயன்படுத்தலாமா?
  • எந்த அளவுக்கு ஆங்கிலம் பயன்படுத்தலாம்?
  • ஆங்கிலம் பயன்படுத்தவில்லையென்றால் நாம் சொல்வது அவர்களுக்கு புரியாதே. என்ன செய்வது?

போன்ற கேள்விகள் கேட்கின்றனர்.

இது நியாயமான கேள்விகள்தான், முக்கியமான கேள்விகள் கூட.

இந்த கேள்விகளுக்கு

  • ஆங்கிலத்தில் சொல்லிகொடுத்தால் தான் பிள்ளைகளுக்கு புரிகிறது எனவே ஆங்கிலம் பயன்படுத்துவது அவசியம் என்றும்
  • ஆங்கிலம் ஓரளவுக்கு தேவையான இடங்களில் பயன்படுத்தலாம் என்றும்
  • முழுக்க முழுக்க தமிழ் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றும்
பலவகையான பதில்களையும் கேட்கிறோம்.

இந்த கேள்விகளுக்கு என் அனுபவத்திலும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களிலிருந்தும் சில விளக்கங்கள் தர விருப்பம். மேற்கண்ட முறைகளைப் பற்றி என் கருத்துக்கள் இங்கே.

1. ஆங்கிலம் பயன்படுத்துவது அவசியம்...

தமிழ்ப் பள்ளிக்கு வரும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது. அவர்கள் நாம் வகுப்பில் சொல்வதை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் சொல்வது புரியாவிட்டால் என்ன பயன், எப்படி சொல்லிக்கொடுப்பது. எனவே ஆங்கிலம் பயன்படுத்துவது அவசியமே என்கிறார்கள் ஆங்கில பயன்படுத்துவது அவசியம் என்பவர்கள். இது சரியாக தெரிந்தாலும் இதனால் நண்மைகள் குறைவே.

 நமது நோக்கம் நம் பிள்ளைகள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழை அதிகம் கேட்கவேண்டும், தமிழில் பேச வேண்டும் என்பதே. பெரும்பாலன தமிழ்ப்பள்ளிகள் வாரம் ஒருமுறைதான் நடக்கிறது. அதிலும் ஒன்று முதல் இரண்டு மணிகள் மட்டுமே பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில் இருக்கிறார்கள். நிறைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கு வெளியே தமிழைக் கேட்கும் வாய்ப்புகளும் குறைவே. வாரம் ஒரு சில மணிகளில் மட்டும் தமிழ் மொழிச்சூழலில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணிகளாவது தமிழ் மொழியை கேட்க கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுவானேன்?

நம் பிள்ளைகள் தமிழ் கற்க வருகிறார்களே ஒழிய தமிழ் மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வரவில்லை என்பதை நினைவில் கொள்வோம். எனவே வகுப்பில் தமிழில் பேசவில்லையென்றால் நாம் அவர்கள் நேரத்தையும் வீணாக்குகிறோம்.

தமிழில் பேசினால் அவர்களுக்கு புரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்குப் புரியும்படி TPRS என்னும் முறையை பயன்படுத்தி பிள்ளைகளுக்கு புரியும்படியும், தமிழை நன்கு கற்கும்படியும் செய்ய முடியும்.

2. ஆங்கிலம் ஓரளவுக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம்....

பிள்ளைகள் தமிழ்க் கற்க ஆரபிக்கும் காலங்களில் ஒரு சில விஷயங்களை விரைவிலும் எளிதிலும் புரியவைக்க அவசியம் உணடாகும் நேரங்களில் ஒரு சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் விளக்குவதில் தவறில்லை என்கிறார் பேராசிரியர் முனைவர் குமார் அவர்கள்.

ஆனால், இதுவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அதுவே பழக்கமாகி ஆங்கில பயன்பாடு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதல் வருடம் மட்டும் ஆங்கில பயன்பாடு 10-15% மட்டும் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். பின் முழுக்க முழுக்க தமிழ் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

எனவே தேவை கருதி ஓரளவு ஆங்கிலமும் பின் முழுக்க தமிழிலும் தமிழ்க் கற்றுக்கொடுக்க வேண்டும்.


3. முழுக்க முழுக்க தமிழை மட்டும் பயன்படுத்த வேண்டும்...

"மொழி வகுப்பில் அந்த மொழியைத்தவிர வேறு மொழிகளைப் பயன்படுத்தக் கூடாது" என்று கண்டிப்பாக சொல்கிறார் மொழியியலாளர் ஸ்டீஃபன் க்ரேஷன் அவர்கள்.

பிள்ளைகள் தமிழ்க் கற்க வந்துள்ளார்கள். எனவே அவர்களுக்கு தேவையான அளவு மொழிச்சூழல் உருவாக்கவும், தேவையான அளவுக்கு Comprehensible Input தரவும் தமிழ் வகுப்பில் தமிழில் மட்டும் பேசுவதே சரியாக இருக்கும்.

ஐந்து வயதில் தமிழ்ப்படிக்க வரும் பிள்ளைகள் மொழியை நன்கு கற்கும் வயதில் உள்ளனர். அந்த வயதில் தமிழை நிறைய கொடுக்கும் வாய்ப்பை தவிர விடக்கூடாது.

இளமையில் கல். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். மேலும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே இளவயதிலேயே தமிழை அதிகம் அறிமுகப் படுத்த வகுப்பில் தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


என் அனுபவம்

நான் ஃப்ரென்ச் மொழிவகுப்புக்கு சென்ற முதல் நாளிலிருந்து கடைசி வரை அந்த ஆசிரியர் ஃப்ரென்ச் மொழியில் தான் பேசினார். முதலில் சற்று கடினமாக இருந்தாலும் பின்னால் எளிமையாகவே இருந்தது.

திருமதி வைஜயந்தி ராமன் அவர்கள் TPRS முறையில் எங்களுக்கு பயிற்சி கொடுத்த போது ஃப்ரென்ச் மொழியிலேயே பேசினார். எங்களால் அவர் சொன்ன கதையை எந்த மொழிபெயர்ப்பும் செய்யாமல் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதோடு இதே முறையை நான் ஒரு பயிற்சியில் பயன்படுத்திய போது பங்கு கொண்ட 30+ ஆசிரியர்களாலும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நான் என் வகுப்பில் முதல் நாளன்றே தமிழில் தான் ஆரம்பிப்பேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை "I English speak no"  என்று சொல்வேன். ஆரம்ப நாட்களில் மாணவர்களால் தமிழில் பதில் சொல்ல முடியாது. அவர்கள் தமிழில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஆனால் நான் சொல்வது அவர்களுக்கு புரிந்தது என்பதையும், என் கேள்விக்கு பதில் தெரியும் என்பதையும் சைகை மூலமோ, பொருட்களை சுட்டிக்காட்டுவது மூலமோ புரிய வைத்தால் போதும். ஆனால், நிச்சயமாக ஆங்கிலத்தில் பதில் சொல்லக்கூடாது. இது நல்ல பலனை கொடுக்கிறது.

மேலும், நாம் நம் தாய் மொழியை கற்கும் போது ஆங்கிலத்தலா விளக்கம் கொடுத்தார்கள்? அப்படியிருக்க தமிழ் வகுப்பில் மட்டும் ஏன் ஆங்கிலம் தேவைப்படுகிறது?

எனவே:
  • தமிழ் வகுப்பில் ஆங்கில பயன்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.
  • தேவைப் படும்போது அவ்வப்போது மிகக்குறைவாக பயன்படுத்தலாம்.
  • என் ஆலோசனை. முழுக்க முழுக்க தமிழ் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். இதுமட்டும் தான் பிள்ளைகள் தமிழை விரைவில் கற்றுக்கொள்ள வழி வகுக்கும்.

நன்றி
லோகு

1 comment:

  1. லோகு,
    தங்களின் வலைப்பதிவுகளுக்கு நன்றிகள்.
    அயலகத்தில் தமிழ் கற்ப்பிப்ப்ப்ர்க்கும், கற்போர்க்கும் மிகவும் பயனாகும்.

    "முழுக்க முழுக்க தமிழ் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்" என்பது அயலகத்தில் சற்றே கடினம். மிகக்குறைந்த வகுப்பு நேரத்தில், தமிழில் மட்டுமே பேசி மாணவர்களுக்கு புரியும் உரையாடல் செய்வதில் சிக்கல்கள் உள்ளன. என் கருத்து - சற்று ஆங்கிலம் கலக்கலாம். ஆனால், நேரம் செல்லச் செல்ல, ஆண்டு செல்லச் செல்ல, ஆங்கிலக் கலப்பு குறைய வேண்டும்.

    வருத்தமளிக்கும் ஒரு உண்மை - பல ஆசிரியர்கள் அதிக அளவு ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள். மாணவர்களுக்குப் புரிய வேண்டுமே என்னும் அறிதல் நிலையால் அல்ல. ஆசிரியருக்கே தமிழைவிட ஆங்கிலம்தான் இயல்பாக வருவதால். இது அவசியம் திருத்தப்பட வேண்டும்.

    ReplyDelete