Friday, July 15, 2016

தாய் மொழிக் கற்றலின் அவசியம்

நாம் ஏன் தாய்மொழி கற்கவேண்டும்? நாம் ஏன் பெற்ற தாயிடம் பேசவேண்டும் என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது? நமக்கு உயிர் கொடுத்தவள் தாய்! நமக்கு அடையாளம் கொடுத்தது நம் தாய்மொழியல்லவா! நாம் யார் என்னும் கேள்விக்கு ஒரே பதில் நம் மொழியும் நம் கலாச்சாரமும் மட்டும்தானே என்கிறார் பேராசிரியர் முனைவர் ஹார்ட் அவர்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

இது தன் தாய்மொழியை பேசவோ எழுதப் படிக்கவோ முடியாதவர்களுக்கும் பொருந்தும் அல்லவா?

நாம் நம் எண்ணங்களையும் உணர்வுகளை வெளியிடும்போது நம் தாய்மொழியைத்தான் முதலில் பயன்படுத்துவோம் என்கிறார் முனைவர் ஹார்ட். ஆதலால் அந்த தாய்மொழியறிவு இல்லையென்றால் நாம் வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களைக் கூட சரியாக செய்யமுடியாமல் போகலாம் அல்லவா?  தாய்மொழியை கற்காமல் வேற்று மொழிகளை மட்டுமே கற்பவர்கள் எந்த ஒரு மொழியிலும் மொழித்திறமை பெறாதவர்களாகவே இருக்கின்றனர் என்னும் அதிர்ச்சித் தகவலையும் அளிக்கிறார் முனைவர் ஹார்ட் அவர்கள். பல மொழிகளைக் கற்போம், ஆனால், ஒரு மொழியை, அதாவது தாய்மொழியை, கசடற கற்போம்.

இங்குள்ள சூழ்நிலையால் இங்கு வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் அவர்கள் தாய்மொழியல்ல, அது அவர்களின் தாயின் மொழி என்கிறார் மொழியியல் பேராசிரியர் முனைவர் குமார் அவர்கள். இங்குள்ள நம் பிள்ளைகள் தமிழை அவர்களின் தாயின் மொழியாக மட்டும் கருதாமல், தங்கள் தாய்மொழியாகவே உள்ளூர உணர்ந்து தமிழர்களாக வளர, தமிழர்களாக வாழ வழிசெய்து கொடுக்க அயராது உழைக்கும்  அனைவருக்கும் பாராட்டுக்கள்!

குழந்தைகள் சிறு வயதில் மொழி கற்கும் இயந்திரங்களாக இருப்பது இயற்கை அதிசயங்களில் ஒன்று. மூன்று முதல் எட்டு வயது பிள்ளைகள் எந்த மொழியையும் இரும்பைக் கவரும் காந்தம் போல பற்றிக்கொள்கிறார்கள். மேலும் பலமொழி கற்பதால் மூளை வளர்ச்சி அடைவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார் முனைவர் குமார். எனவே இங்குள்ள பிள்ளைகள் ஆங்கிலத்தோடு தாய்மொழி தமிழ் படிப்பது அவர்களுக்கு மற்ற துறையிலும் சிறந்து செயல்பட உதவும்.

தாய்மொழி என்பது பல நூற்றாண்டுகளாக நம் மூதாதையர் பேசிப் பழகிய மொழி. அது நம் மரபணுக்குள் ஆழப் பதிந்துள்ள மொழி. ஏற்கெனவே நமக்குள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ள மொழியைப் படிப்பதால் உண்டாகும் நண்மைகள் வேறு புதிய மொழி படிப்பதன் மூலம் எப்படி உண்டாக முடியும்? தாய்மொழி பேசுவதாலும், படிப்பதாலும் மட்டுமே நாம் ஒரு மொழியில் புலமை அடைய முடியும்.

நம்முள் ஏற்கெனவே உள்ள தாய்மொழியில் நல்லதோர் தேர்ச்சி பெற்றால் அந்த திறன் மற்ற மொழிகளை எளிதில் கற்க உதவும் என்கிறது ஒரு ஆய்வு. தமிழை ஆழக்கற்றதனால்தானே பாரதியாரால் அத்தனை மொழிகளை சிறப்பாக கற்க முடிந்தது.
தாய்மொழி தமிழை நாம் நன்றாக கற்கவில்லையென்றால் நம் மொழியில் குவிந்துள்ள ஏராளமான இலக்கிய செல்வங்களை நாம் அனுபவிப்பது எப்படி?

“இந்த magazine editor என்னிடம் ஒரு article எழுதச் சொல்லி request பண்ணார். நான் எந்த topic--இல் develop பண்றதுன்னு think பண்ணி think பண்ணி எனக்கு headache தான் வந்தது. Final-லா இந்த topic-லேயே publish பண்ணா super--ஆ இருக்கும்னு decide பண்ணி ஓரளவு complete பண்ணிட்டேன்.”

இது என்ன மொழி? இதுதான் தமிழா? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இதே போக்கில் சென்றால் நாளை நம் சந்ததியினர் பேசப்போகும் தழிழ் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? இந்த நிலை வராமல் இருக்க நாம் நம் பிள்ளைகளிடம் தமிழில் பேசுவோம். தமிழை கற்க வைப்போம். நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சொத்துக்களில் சிறந்த சொத்து நம் மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்களுக்கு சரிவர கொடுப்பதுதானே.

நன்றி
லோகநாதன் வெங்கடாசலம்

6 comments: