தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழாவுக்கு எழுதிய நாடகம் - லோகு
அறிவிப்பாளர்:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள். நாம் தான் ரொம்ப அறிவாளி என்கிற தலைக்கனம் இருக்கக் கூடாது. நம் அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள மாதிரி செயலில்தான் காட்டவேண்டுமே தவிர அடுத்தவர்களை இகழும்படி இருக்கக் கூடாது.
ஒரு நாட்டில் 3 அறிவாளிகள் இருந்தார்கள். அவர்கள் எலோரிடமும் தாங்கள்தான் அறிவாளிகள் என்றும் அவர்களை அறிவால் வெல்ல யாராலும் முடியாது என்றும் கூறி வந்தார்கள். அவர்கள் போட்டி வைத்து இடக்கு முடக்கான கேள்விகள் கேட்டு தோல்வி அடைபவர்களுக்கு தண்டனையும் கொடுப்பார்கள்.
ஒரு முறை அவர்கள் முல்லா வாழும் நாட்டுக்கு வந்தார்கள். அங்கு அரசரிடம் சென்று போட்டி அறிவித்தார்கள். அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட யாரும் போட்டியில் கலந்துக்கொள்ள முன் வரவில்லை. அப்போது முல்லா வெளி நாடு சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக திரும்பி வந்த முல்லா போட்டியில் கலந்துக்கொண்டு எப்படி அவர்களை அறிவால் வென்றார் என்பது தான் கதை.
காட்சி 1 :
இடம்: அரசவை
பாத்திரங்கள்: அரசர்,காவலன், அறிஞர்கள், 3 “அறிவாளிகள்”, முல்லா
காவலன்:
வணக்கம் அரசே.
தங்களைக் காண மூன்று பேர் வந்திருக்கிறார்கள்.
அரசர்:
வாழ்க காவலரே!
அவர்களை. வரச் சொல்லுங்கள்.
( 3 பேர் வருகிறார்கள். )
அறி 1, 2, 3:
வணக்கம் மன்னர் பெருமானே.
அர:
வாழ்த்துக்கள்.
நீங்கள் வந்த விஷயம் என்ன?
அறி 1:
அரசே. நாங்கள் மூவரும் நிறைய படித்தவர்கள்.
அறி 2:
எங்களுக்கு தெரியாத விஷயமே இந்த பூமியில் இல்லை.
அறி 3:
நாங்கள் ஒரு போட்டி வைக்க இருக்கிறோம்.
நாங்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால் நாங்கள் உங்கள் நாட்டு அடிமைகள்.
இல்லை என்றால் இந்த நாடே எங்களுக்கு அடிமை.
அறி 1:
எங்களிடம் போட்டி போட உங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டா?
அரசர்:
என்ன அவையோரே, நம் நாட்டு அறிஞர்களே!
உங்களில் யார் போட்டியில் கலந்துக்கொள்ளப் போகிறீர்கள்?
(அமைதி)
அரசர்:
என்ன? நம் நாட்டில் அறிவாளிகள் யாரும் இல்லையா?
புலவர் 1 :
அரசே, இவர்களைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம்.
இவர்கள் மற்றவர்களை அவமானப் படுத்தவே கேள்வி கேட்பவர்கள்.
இவர்களிடம் போட்டி போட்டு அவமானப் பட நாங்கள் தயாராக இல்லை.
அரசர்:
அப்படி என்றால் நம் நாடு இவர்களுக்கு அடிமை ஆவதா?
முல்லா எங்கே. அவரை அழையுங்கள்.
புலவர் 2:
அரசே, முல்லா வெளி நாடு சென்றுள்ளார்.
அறிவாளி 2:
வெட்கம். இந்த நாடு இன்று முதல் எங்கள் அடிமை.
நாங்கள் தான் இந்த நாட்டு அரசர்கள்.
(முல்லா வருகிறார்)
முல்லா:
மன்னர் பெருமானே வணக்கம்.
அரசர்:
வாருங்கள் முல்லா.இங்குள்ள பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியுமா?
இவர்கள் வைக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு
நீங்கள் தான் நம் நாட்டை காக்க வேண்டும்.
முல்லா:
மன்னா, உங்கள் உத்தரவு படி நான் போட்டியில் கலந்துக்கொள்கிறேன்.
(முல்லாவின் ஆடையையும் கழுதையையும் பார்த்து)
அறிவாளி 3:
என்ன ? …...
நீங்கள் போட்டியிடப் போகிறீர்களா?
எங்களுக்குத் தான் அவமானம்....
அறிவாளி 1:
எங்களைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?
அறிவாளி 2:
எங்கள் அறிவைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?
முல்லா:
முதலில், போட்டி என்ன என்று கூறுங்கள் ஐயா...
அறிவாளி 3:
நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம்.
அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
நீங்கள் சரியான பதில் சொன்னால் நாங்கள் உங்கள் நாட்டுக்கு அடிமைகள்
தவறான பதில் சொன்னால் இந்த நாடே எங்களுக்கு அடிமை.
மு:
எதற்கு ஐயா வளவள வென்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
சீக்கிரம் உங்கள் கேள்வியை கேளுங்கள்.
அறிவாளி 1:
இந்த உலகின் மைய இடம் எது?
மு:
என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மைய இடம்.
அறிவாளி 1:
என்ன உங்கள் கழுதை நிற்கும் இடமா?
அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,
மு:
அது உங்கள் வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள்.
உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம்
உலகின் மையம் என்று தெரியும்.
( முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார். )
அறிவாளி 2:
ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
மு:
என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்
( இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார். )
அறிவாளி 3:
மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?
முல்லா :
அறிஞர்களே உங்கள் மூவருடைய தலையிலும் எவ்வளவு முடி உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தலையிலும் உள்ள முடிகளைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்.
அறிவாளி 1, 2, 3:
ஐயோ, வேண்டாம், வேண்டாம்.
நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்.
நாங்கள் போட்டியில் தோற்று விட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
நாங்கள் இனிமேல் உங்கள் அடிமை.
( போட்டியில் வென்றதால் அரசர் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். )
அரசர்:
முல்லா உங்கள் அறிவை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
நம் நாட்டு மானத்தை காப்பாற்றிய உங்களுக்கு மிக்க நன்றி.
மு:
நல்லது அரசே. எல்லாம் என் பாக்கியம்.
அரசர்:
முல்லா அவர்களே, உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று சொல்லுங்கள்.
என்ன கேட்டாலும் தருகிறேன்.
மு:
அரசே, அந்த மூன்று அறிஞர்களையும் அவர்கள் நாட்டுக்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்
அரசர்:
அப்படியே நடக்கட்டும்.
மூவரும்:
(இன்னா செய்தாரை ஒறுத்தல் … )
முல்லா அவர்களே, நீங்கள் சிறந்த அறிவாளி மட்டுமல்ல.சிறந்த மனிதரும் கூட.
எங்களை மனிதர்களாக மாற்றினீர்கள்.
இனிமேல் நாங்கள் எங்கள் திறமை அடுத்தவர்களுக்கும் பயன்படும்படி நடந்துக்கொள்வோம்.மிக்க நன்றி.
முல்லா:
நல்லது போய் வாருங்கள்.
அறிவிப்பாளர்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (குறள்)
அதாவது …
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய தகுதி அல்லது திறமையால் வென்றுவிட வேண்டும்.
நன்றி! நன்றி! நன்றி!