Sunday, August 30, 2015

அயலகத்தில் தமிழ்க் கல்வி - நமது நோக்கம்



புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த மாதிரியான தமிழ் சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க உள்ளோம்.

தமிழ் மொழியைப் பற்றி அறிந்தவர்கள் கொண்ட சமுதாயமா? அல்லது நம்மைப் போலவே தமிழில் பேசுபவர்களாக, அவர்களது அடுத்த தலைமுறையினரையும் தமிழ்க் கற்க ஊக்குவிப்பவர்களாக இருப்பவர்களாக இருப்பவர்களா?

Hey, I went to Tamil school, I know about Tamil, I can read, write, and speak little bit என்று சொல்பவர்களா? அல்லது

நான் தமிழன். தமிழ் என் தாய் மொழி. என் மொழியில் சிறப்பான இலக்கிய வளம் உள்ளது. என்னைப் போலவே என் பிள்ளைகளும் தமிழர்களாக வாழவேண்டும் என்று சொல்பவர்களா?

ஏற்கெனவே 100 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வரலாற்றிலிருந்து நாம் கற்பது என்ன?

தமிழினி என்று ஒரு படம் உள்ளது. அந்த படம் சொல்லும் செய்தி என்ன? பிற்காலத்தில் 2 அல்லது 3 தலைமுறைகளுக்குப் பின் தமிழ் பிள்ளைகள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று சொல்கிறது. இது வெறும் கற்பனை மட்டுமல்ல. பல புலம்பெயர்ந்த நாடுகளில் நடந்ததுதான்.

மொழித்திறன்களில் எது முக்கியம்

மொழித்திறன்களான புரிதல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்றவற்றில் எது முக்கியம்? இரண்டு கண்களில் எந்த கண் முக்கியம் என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது. இரண்டுமே முக்கியம்தான். அதுபோல மொழித்திறன்களில் நான்கு திறன்களும் முக்கியம்தான்..

ஆனால்

தமிழ்மொழியல்லாத சூழலில் வாழும் பிள்ளைகள், வீட்டிலும் அதிகம் தமிழ் கேட்கவும் பேசவும் வாய்ப்பு இல்லாத பிள்ளைகள், தமிழ்ப் பள்ளிகளில் வாரம் ஒரு முறை மட்டுமே தமிழ் கேட்கவும் பேசவும் வாய்ப்புள்ள பிள்ளைகள், வருங்காலத்தில் நீண்ட காலங்களுக்கு தமிழை பயன்படுத்த வேண்டுமென்றால், அவர்களோடு தமிழ் சேர்ந்து இருக்க வேண்டுமென்றால், எந்த திறன் முதலில் முக்கியம் என்பது சரியான கேள்வியாக இருக்கும்.

மொழி எதற்காக உருவாக்கப்பட்டது? மொழி மற்றவர்கள் பேசுவதை புரிந்துக்கொள்ளவும், நாம் சொல்ல நினைத்ததை மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ளவே மொழி உருவாக்கப்பட்டது. ஒரு மொழியின் முக்கிய நோக்கம் இதுதானே. மொழிக்கான தொடர்புகளாக இரண்டு வகைகள் உள்ளன; வாய்வழி, எழுத்துவழி. எந்த ,மொழியைப் பயன்படுத்துபவர்களை எடுத்துக்கொண்டாலும் வாய்வழி தொடர்பு எவ்வளவு சதவீதம் பயன்படுத்துகிறோம், எழுத்துவழியாக தொடர்புக்கு எத்தனை சதவீதம் பயன்படுத்துகிறோம். சந்தேகத்துக்கிடமின்றி வாய்வழி தொடர்புக்குத்தான் நாம் மொழியை அதிகம் பயன்படுத்துகிறோம்.
மேலும், தமிழல்லாத சூழலில் வாழும் பிள்ளைகள் எழுத்துவழி தொடர்புக்கு தமிழை பயன்படுத்த எத்தனை சதவீதம் பேர் முயல்வார்கள்? எனவே வாய்வழி தொடர்புக்கு தமிழை பயன்படுத்தவில்லையென்றால், எந்த அளவுக்கு தமிழ் அவர்கள் மனதில் நிற்கும் என்கிற கேள்வி நம் முன் எழுகிறது. அதற்கு நம் பதில் என்ன?

ஒரு மொழியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த ஒரு சிறந்த வழி அம்மொழியை தினமும் பயன்படுத்துவது. மொழித்திறன்களில் நாம் அதிக அளவில் பயன்படுத்துவது மற்றவர்கள் சொல்வதை கேட்டு புரிந்துக்கொள்ள உதவும் புரிதல் திறன், மற்றும் நாம் சொல்ல நினைத்ததை மற்றவர்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த உதவும் பேசுதல் திறன். உலகில் பல மக்கள் அவர்கள் மொழியில் எழுதப் படிக்க தெரியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால், பேசாமல் இருப்பவர்கள் வெகு வெகு சிலரே.

எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ்ப் பிள்ளைகள் தமிழை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்றால், அவர்களை முதலில் நாம் பேச வைக்க வேண்டும். அதற்கான பயிற்சியை முதலில் கொடுக்க வேண்டும். பிறகு எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கலாம். இப்படி பேச்சுத்திறன் கொடுத்து வகுப்புக்கு வெளியில் அவர்கள் மொழியை பயன்படுத்த தேவையான பயிற்சி கொடுக்கவில்லையென்றால், நூறாண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சந்ததிகள் இன்றுள்ள நிலைக்கு இவர்களும் வருவதை எப்படி தடுக்கப் போகிறோம்?


1 comment: