Tuesday, November 29, 2016

தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம்

அக் 9, 2016 - ப்ரீமாண்ட் வாஷிங்டன் பள்ளியில் பெற்றோர்கள் சந்திப்பில்...

Friday, November 25, 2016

தமிழே உன் வயதென்ன?

யாரிடமும் வயதைக் கேட்கக்கூடாது என்பார்கள். ஆனால், என் அன்னைத் தமிழிடம் நான் கேட்பது தவறு இல்லையல்லவா? தமிழின் சரியான வயது என்ன? சரியாக அல்ல தோராயமாகக் கூட யாருக்கும் தெரிந்தது மாதிரி இல்லையே. யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு பழமையான மொழி என்பதாலா?

ஒரு புராணக்கதை ஞாபகம் வருகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம். அதை தீர்த்து வைக்கச் சொல்லி சிவனிடம் சென்றார்களாம். சிவன் நான் என் சுயரூபத்தில் நிற்கிறேன். உங்கள்ளில் யார் முதலில் என் தலையையோ பாதத்தையோ பார்க்கிறீர்களோ அவர்தான் பெரியவர் என்றாராம். பின் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக தன் பெரிய உருவை எடுத்து நின்றாராம். விஷ்ணு பன்றியாக தோன்றி பூமியை குடைந்து சிவனின் காலைத் தொட சென்றதாகவும், பிரம்மா பறவையாக மாறி சிவன் தலையை முதலில் பார்க்க பறந்து வந்ததாகவும், பல காலங்கள் பறந்தும் சிவனது காலையோ தலையையோ இவர்களால் பார்க்க முடியவில்லை என்று இந்தக் கதை சொல்கிறது.

அது போல எவ்வளவுதான், எவ்வளவு காலங்கள்தான் ஆராய்ச்சி செய்து பார்த்தும், தமிழின் ஆரம்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவு பழமையான மொழி தமிழ் மொழி என்பது மட்டும் நிச்சயம். அறிவியல் / தொல்பொருள் ஆராய்ச்சிப் படி இது போன்ற விஷயங்களைக் கணிக்க சரியான ஆதாரம் வேண்டுமல்லவா? எனக்குத் தெரிந்தவரையில் தமிழின் வயது என்னவாக இருக்கும் என்று யூகிக்க இங்கு முயற்சிக்கிறேன்.

#1. 2,000 ஆண்டுக்கு முன் சங்க இலக்கியங்கள் நம்மிடம் உள்ளதால், தமிழின் வயது குறைந்தது 2,000 ஆண்டுகள் இருக்கும் என்று சிறு குழந்தை கூட சொல்லி விடும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட வளமான இலக்கியங்களை நாம் படைக்க முடிந்ததென்றால் அந்த காலத்தில் தமிழ் எந்த அளவு வளர்ந்து முதிர்ச்சி அடைந்திருக்க முடியும்? அப்படியென்றால் அதற்கு முன் குறைந்தது 1,000 வருடங்களாவது இந்த மொழி இருந்திருக்க வேண்டும். இதை வைத்து தமிழின் வயது குறைந்தது 3,000 ஆண்டுகள் என்று எளிமையாக சொல்லிவிடலாம்.

#2. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் 3,000 ஆண்டுகளுக்கும் முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பாக்கள் வடிவில் இலக்கண நூல் எழுதினார்கள் என்றால் அதற்கு முன் குறைந்தது 1000 வருடங்களாவது இந்த மொழி இருந்திருக்க வேண்டும். இதைவைத்து தமிழின் வயது குறைந்தது 4,000 ஆண்டுகள் என்று கணிக்கலாம்.

#3. பேராசிரியர் முனைவர் ஹார்ட் அவர்கள் "4,000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழிலிருந்து பிரிந்திருக்கக் கூடும்" என்கிறார். அதாவது கன்னடம் போன்ற ஒரு முதிர்ந்த மொழியை ஈன்றெடுக்குமளவுக்கு 4,000 ஆண்டுகள் முன்பே தமிழ் வளர்ச்சி அடைந்திருக்கிறதென்றால் தமிழின் வயது குறைந்தது 5,000 ஆண்டுகள் என்று கணிக்கலாம்.

#4. அதற்கும் முன்பே தமிழிலிருந்து தெலுங்கு பிரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே தமிழின் வயது 6,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்புண்டு.

#5. முச்சங்கங்களுல் முதற்சங்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன் மொழிக்காக சங்கம் வைத்திருந்தோம் என்றால் இந்த மொழி நிச்சயமாக 6,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் இல்லையா?

#6. தமிழன்னை தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளை ஈன்றிருக்கிறாள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி உருவாகவே எவ்வளவோ காலங்கள் ஆகிறது. அப்படி இருக்க 10க்கும் மேற்பட்ட மொழிகளை ஈன்ற அன்னைக்கு குறந்தது 10,000 ஆண்டுகள் வயது இருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா?

#7.  லேமூரியா / குமரிக்கண்டம் பற்றி படிக்கிறோம். ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தால் இதை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. குமரிக்கண்டத்தின் காலம் 20,000 ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரை இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அது உண்மை என்பதற்கான சிறு ஆதாரமாவது கிடைக்கும் காலத்தில் தமிழின் வயது 20,000 முதல் 50,000 வரை என்பது தெரிந்துவிடும். ஆனால், இந்த ஆதாரம் கிடைப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை.

#8. கடைசியாக. தமிழ் வேறு எந்த மொழியிலிருந்தும் உருவாகாத தானாக தோன்றிய மூல மொழி என்கிறது ஆய்வு. இது மறுக்க முடியாக உண்மையும் கூட. அப்படியானால்... நமக்குத் தெரிந்து கடைசியாக தானாகவே ஒரு மொழித் தோன்றியது எப்போது? சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய ஹிந்தி போன்ற மொழிகள் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருக்கலாம். லத்தீன மொழியிலிருந்து தோன்றிய ஆங்கிலம் கூட சுமார் 1,000 வருடங்களுக்கு முன்பு தான் தோன்றி இருக்கக் கூடும். ஆனால், தானாக தோன்றிய மொழி எப்போது உருவாகி இருக்க முடியும்?

ஒரு மொழி தானாக எப்போது தோன்றுகிறது? மனிதர்கள் முன்னினத்திலிருந்து மாறிய காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மொழி உருவானது. பொதுவாக மொழி ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கக் கூடும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதாவது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் மனிதர்கள் மொழியைப் படைக்க ஆரம்பித்தார்கள். அந்த காலக்கட்டதில் ஆரம்பித்து 1 லட்சம் ஆண்டுகள் முன் வரை பூமியில் பல இடங்களில் வாழ்ந்த மனிதர்கள் மொழியை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பிக்கும் திறனையும் ஆற்றலையும் பெற்றார்கள். அப்படியானால் அந்த காலத்தில்தான் தமிழும் தோன்றியிருக்கக் கூடும். அப்படிப் பார்த்தால் தமிழின் வயது குறைந்தது 1 லட்சம் ஆண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது.

#9. அலெக்ஸ் கோலியர் (Alex Collier) என்பவர் "ஒரு காலத்தில் நாம் அனைவரும் ஒரே ஒரு மொழியைத்தான் பேசினோம். அந்த மொழி தமிழ் மொழி" என்கிறார். இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அவர் சொல்வது உண்மையென்று எடுத்துக்கொண்டால் மனிதர்கள் மொழியை முதலில் பயன்படுத்த ஆரம்பித்த காலம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான காலம் தான் தமிழ் தோன்றியிருக்க வேண்டுமல்லவா?

அதன்படி தமிழின் வயது 2 லட்சம் ஆண்டுகள் ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது, இல்லையா.

அப்படியென்றால், "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி" என்று சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. (இந்த பூமியில் கல்லும் மண்ணும்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். அதனால் அதற்கும் முன்பான மூத்தக்குடி என்பது கொஞ்சம், இல்லை இல்லை, ரொம்பவே ஓவராகத்தான் தெரிகிறது)

நன்றி
லோகு வெங்கடாசலம்

பாட்டி, வடை, காக்கா, குறள்

இன்று விசுவின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒருவர் விசுவிடம் "நீங்க, காக்கா வடை கதையைக்கூட மூன்று மணி நேரத்துக்கு சொல்வீங்க" என்று சொன்னார். இதை கேட்டபோது இதே காக்கா வடை கதையை வைத்து நான் எழுதிய ஒரு நாடகம் ஞாபகம் வந்தது.

இது 2009ல் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழாவுக்காக எழுதியது. அன்று நடித்த மாணவர்கள் விஷால், மணி, மனோ, அஷ்வின், கீர்த்தி போன்றோர் மிகச் சிறப்பாக இதைச் செய்தார்கள்.

பல குறள் மன்னர்

குறள் பாட்டு:
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
       மெய்வருத்தக் கூலி தரும்
      (ஒன்றே குலமென்று பாடுவோம் மெட்டில்)
    அகர முதல எழுத்தென்று பாடுவோம் உலகில்
    ஆதி பகவன் முதற்றே உலகென்று ஓதுவோம்
    மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்
           (அகர முதல)
எங்கும் குறள் எதிலும் குறள். குறளை எங்கே எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்னு ஒரு கதை மூலமா சொல்லப் போறோம். நான் சொல்லவந்த கருத்தை நமக்கு எல்லாம் தெரிஞ்ச பாட்டியும் காகமும் என்கிற கதை மூலம் சொல்லப்போறோம்.


ஒரு ஊர்லெ ஒரு பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த வழியா ஒருத்தர் வந்தார் (வ போ).

வபோ: வணக்கம் பாட்டி. ஏன் பாட்டி இந்த வயசுலயும் இப்படி கஷ்டப் பட்றீங்க?
பாட்டி: என்னப்பா செய்றது? என்னை கவனிக்க உங்க மாதிரி நல்ல பிள்ளைங்க இல்லை. அதனால என் பிழைப்புக்கு நானே வழி தேடிக்கிட்டேன். எனக்கு வருமானத்துக்கு எதுவும் வழி இல்லைன்னு சும்மா இருக்கறவங்களைப் பார்த்து,
இவ்வளவு வழிகள் இருக்கற இந்த உலகத்துல இப்படி சும்மா இருக்கறீங்களேன்னு சொல்லி இந்த பூமியே சிரிக்குமாம்.

       இலம்என்று அசயி இருப்பாரை காணின்
       நிலம்எனும் நல்லாள் நகும்.

வபோ: அருமையா சொன்னிங்க பாட்டி. இனிமேல் நான் எதுவும் இல்லைன்னு எப்பவும் சும்மா இருக்கமாட்டேன்.
அப்ப ஒரு காக்கா வந்து வடையை எடுத்துக்கிட்டு போயிருச்சாம். அதாவது பாட்டி சுட்ட வடையை அந்த காக்கா சுட்டுடிச்சி. அந்த பாட்டி காக்காவைப் பார்த்து சொன்னாங்க.
பாட்டி: காக்கா, என் கிட்ட போய் வடையை எடுத்துக்கிட்டயே. நீ செய்றது உனக்கே ஞாயமா இருக்கா?
காக்கா: பாட்டி வாஸ்து படி என் கூட்ல கிச்சன் வக்கல.  எனக்கு இதுதான் வழி.
இப்ப நீங்கதானே சொன்னிங்க.
       இலம்என்று அசயி இருப்பாரை காணின்
       நிலம்எனும் நல்லாள் நகும்.
இப்ப காக்கா மரத்துல உக்கார்ந்திரிச்சி. அப்ப அங்க ஒரு நரி வந்திச்சி. காக்காகிட்ட இருக்கற வடையை சுட திட்டம் போட்டிடிச்சி. 
நரி:   காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகா இருக்கறே. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே... உன் குரல் ரொம்ப நல்லா இருக்குமாமே. ஒரு பாட்டு பாட்றீயா?

கொக்கு தலையிலெ வெண்ணயை வைப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இந்த நரி காக்கா தலையிலே Ice factory-யையே தூக்கி வச்சிரிச்சி. வச்ச ஐஸ்லே உருகின காக்கா பாட்டு பாடிச்சி.

காக்கா: கா, கா, கா,

வச்ச ஐஸ்லெ உருகுன காக்கா, உடனே கா...கா...னு பாடிச்சி. வடை கீழே வீழ்ந்தது. நரி வடையை தூக்கிட்டு ஓடிடுச்சி. இதை கவனிச்ச பாட்டி...

பாட்டி: காக்கா, பாத்தியா என்ன ஆச்சி இப்ப. நாம ஒருத்தருக்கு ஏதாவது தீங்கு செய்தா, பின்னால நமக்கு அந்த தீங்கு வரும்.

         பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
         பிற்பகல் தாமே வரும்

காக்கா, நரியைப் பத்தி complain பண்ண ஆரம்பிடிச்சி.
காக்கா: பாட்டி, நீங்க என்ன சொன்னாலும். இந்த நரி இப்படி வடையை திருடி தின்னக்கூடாது. வடையை திருடறதே இந்த நரிக்க்கு வேலையா போச்சி. மத்தவங்க பொருள் மேல ஆசை படக்கூடாது.

பாட்டி:    காக்கா, மற்றவங்களை நாம குறை சொல்றதுக்கு முன்னாடி, நம்ம குறை என்னன்னு முதல்லே பாக்கனும். அப்படி பாத்தா நமக்கு எந்த பிரச்சனையும் வராது.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

காக்கா: (சோகமா பாடுது)

இரண்டாவது நாளும், இதே மாதிரி காக்கா வடையை எடுத்துக்கிட்டு போச்சி. நரியும் வந்தது. காக்காவை பாட்டு பாடச் சொல்லிச்சி. காக்கா உடனே வடையை கால்ல வச்சிக்கிட்டு காகான்னு பாடிச்சி. ஏமாந்த நரி, வேற ஐடியா பண்ணிச்சி.

நரி:    காக்கா நீ நல்லா dance பண்ணுவியாமே. எங்கே பாடிக்கிட்டே ஒரு dance பண்ணு பாக்கலாம்னு கேட்டிச்சி.

காக்கா யோசிச்சது. என்னடா இது. இந்த நரி விடாது போல இருக்குதே. இதுக்கு என்ன வழி செய்யலாம். குறள்லே என்ன சொல்லி இருக்குன்னு யோசிச்சது.

காக்கா: ஆஹா, தீர்வு கெடைச்சிரிச்சி.

நரியே, எதுக்கு இப்படி கஷ்டப்பட்றே. நானே இந்த வடையை உனக்கு தர்றேன்.  இதோ எடுத்துக்கோ.

(வடையை போட்டது)

நரிக்கு பெரிய குழப்பம்.

நரி: காக்காவே, நான் உன்னை இத்தனை முறை ஏமாத்தி இருக்கறேன். இருந்தாலும் நீயே எனக்கு உதவி செய்யறியே.

இத நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு. இந்த வடையை நீயே சாப்பிடு. நாம இனிமேல் நண்பர்களா இருப்போம்.

வர்ட்டா (ரஜினி ஸ்டைலில்)....

இப்ப நரிக்கும் புத்தி வந்தது. காக்காவுக்கும் பிரச்சனை தீர்ந்தது.

இதப்பார்த்த பாட்டி கேட்டாங்க...

பாட்டி: காக்கா, அந்த நரி உன்னை இத்தனை முறை ஏமாத்திச்சி. இருந்தாலும், அந்த நரிக்கு ஏன் நீயே வடையை கொடுத்தே?

காக்கா: பாட்டி, திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கறார் தெரியுமா?

நமக்கு யாராவது தீங்கு செய்தால், அதுக்கு நாம கொடுக்க வேண்டிய தண்டனை என்ன தெரியுமா? தீங்கு செய்தவர்கள் வெக்கப்படும்படி அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யறதுதான் நாம கொடுக்கற பெரிய தண்டனை.

          இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
          நன்னயம் செய்து விடல்.

அதனாலதான் வடையை நானே கொடுத்தேன்.

அடா, அடா, அடா. பாத்தீங்களா. ஒரு small காக்கா கதையிலேயே Extra Large size-லே குறள்களை பயன்படுத்த முடியுதே. அருமை, அருமை!

நன்றி!