Friday, November 25, 2016

தமிழே உன் வயதென்ன?

யாரிடமும் வயதைக் கேட்கக்கூடாது என்பார்கள். ஆனால், என் அன்னைத் தமிழிடம் நான் கேட்பது தவறு இல்லையல்லவா? தமிழின் சரியான வயது என்ன? சரியாக அல்ல தோராயமாகக் கூட யாருக்கும் தெரிந்தது மாதிரி இல்லையே. யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு பழமையான மொழி என்பதாலா?

ஒரு புராணக்கதை ஞாபகம் வருகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம். அதை தீர்த்து வைக்கச் சொல்லி சிவனிடம் சென்றார்களாம். சிவன் நான் என் சுயரூபத்தில் நிற்கிறேன். உங்கள்ளில் யார் முதலில் என் தலையையோ பாதத்தையோ பார்க்கிறீர்களோ அவர்தான் பெரியவர் என்றாராம். பின் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக தன் பெரிய உருவை எடுத்து நின்றாராம். விஷ்ணு பன்றியாக தோன்றி பூமியை குடைந்து சிவனின் காலைத் தொட சென்றதாகவும், பிரம்மா பறவையாக மாறி சிவன் தலையை முதலில் பார்க்க பறந்து வந்ததாகவும், பல காலங்கள் பறந்தும் சிவனது காலையோ தலையையோ இவர்களால் பார்க்க முடியவில்லை என்று இந்தக் கதை சொல்கிறது.

அது போல எவ்வளவுதான், எவ்வளவு காலங்கள்தான் ஆராய்ச்சி செய்து பார்த்தும், தமிழின் ஆரம்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவு பழமையான மொழி தமிழ் மொழி என்பது மட்டும் நிச்சயம். அறிவியல் / தொல்பொருள் ஆராய்ச்சிப் படி இது போன்ற விஷயங்களைக் கணிக்க சரியான ஆதாரம் வேண்டுமல்லவா? எனக்குத் தெரிந்தவரையில் தமிழின் வயது என்னவாக இருக்கும் என்று யூகிக்க இங்கு முயற்சிக்கிறேன்.

#1. 2,000 ஆண்டுக்கு முன் சங்க இலக்கியங்கள் நம்மிடம் உள்ளதால், தமிழின் வயது குறைந்தது 2,000 ஆண்டுகள் இருக்கும் என்று சிறு குழந்தை கூட சொல்லி விடும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட வளமான இலக்கியங்களை நாம் படைக்க முடிந்ததென்றால் அந்த காலத்தில் தமிழ் எந்த அளவு வளர்ந்து முதிர்ச்சி அடைந்திருக்க முடியும்? அப்படியென்றால் அதற்கு முன் குறைந்தது 1,000 வருடங்களாவது இந்த மொழி இருந்திருக்க வேண்டும். இதை வைத்து தமிழின் வயது குறைந்தது 3,000 ஆண்டுகள் என்று எளிமையாக சொல்லிவிடலாம்.

#2. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் 3,000 ஆண்டுகளுக்கும் முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பாக்கள் வடிவில் இலக்கண நூல் எழுதினார்கள் என்றால் அதற்கு முன் குறைந்தது 1000 வருடங்களாவது இந்த மொழி இருந்திருக்க வேண்டும். இதைவைத்து தமிழின் வயது குறைந்தது 4,000 ஆண்டுகள் என்று கணிக்கலாம்.

#3. பேராசிரியர் முனைவர் ஹார்ட் அவர்கள் "4,000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழிலிருந்து பிரிந்திருக்கக் கூடும்" என்கிறார். அதாவது கன்னடம் போன்ற ஒரு முதிர்ந்த மொழியை ஈன்றெடுக்குமளவுக்கு 4,000 ஆண்டுகள் முன்பே தமிழ் வளர்ச்சி அடைந்திருக்கிறதென்றால் தமிழின் வயது குறைந்தது 5,000 ஆண்டுகள் என்று கணிக்கலாம்.

#4. அதற்கும் முன்பே தமிழிலிருந்து தெலுங்கு பிரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே தமிழின் வயது 6,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்புண்டு.

#5. முச்சங்கங்களுல் முதற்சங்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன் மொழிக்காக சங்கம் வைத்திருந்தோம் என்றால் இந்த மொழி நிச்சயமாக 6,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் இல்லையா?

#6. தமிழன்னை தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளை ஈன்றிருக்கிறாள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி உருவாகவே எவ்வளவோ காலங்கள் ஆகிறது. அப்படி இருக்க 10க்கும் மேற்பட்ட மொழிகளை ஈன்ற அன்னைக்கு குறந்தது 10,000 ஆண்டுகள் வயது இருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா?

#7.  லேமூரியா / குமரிக்கண்டம் பற்றி படிக்கிறோம். ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தால் இதை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. குமரிக்கண்டத்தின் காலம் 20,000 ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரை இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அது உண்மை என்பதற்கான சிறு ஆதாரமாவது கிடைக்கும் காலத்தில் தமிழின் வயது 20,000 முதல் 50,000 வரை என்பது தெரிந்துவிடும். ஆனால், இந்த ஆதாரம் கிடைப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை.

#8. கடைசியாக. தமிழ் வேறு எந்த மொழியிலிருந்தும் உருவாகாத தானாக தோன்றிய மூல மொழி என்கிறது ஆய்வு. இது மறுக்க முடியாக உண்மையும் கூட. அப்படியானால்... நமக்குத் தெரிந்து கடைசியாக தானாகவே ஒரு மொழித் தோன்றியது எப்போது? சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய ஹிந்தி போன்ற மொழிகள் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருக்கலாம். லத்தீன மொழியிலிருந்து தோன்றிய ஆங்கிலம் கூட சுமார் 1,000 வருடங்களுக்கு முன்பு தான் தோன்றி இருக்கக் கூடும். ஆனால், தானாக தோன்றிய மொழி எப்போது உருவாகி இருக்க முடியும்?

ஒரு மொழி தானாக எப்போது தோன்றுகிறது? மனிதர்கள் முன்னினத்திலிருந்து மாறிய காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மொழி உருவானது. பொதுவாக மொழி ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கக் கூடும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதாவது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் மனிதர்கள் மொழியைப் படைக்க ஆரம்பித்தார்கள். அந்த காலக்கட்டதில் ஆரம்பித்து 1 லட்சம் ஆண்டுகள் முன் வரை பூமியில் பல இடங்களில் வாழ்ந்த மனிதர்கள் மொழியை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பிக்கும் திறனையும் ஆற்றலையும் பெற்றார்கள். அப்படியானால் அந்த காலத்தில்தான் தமிழும் தோன்றியிருக்கக் கூடும். அப்படிப் பார்த்தால் தமிழின் வயது குறைந்தது 1 லட்சம் ஆண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது.

#9. அலெக்ஸ் கோலியர் (Alex Collier) என்பவர் "ஒரு காலத்தில் நாம் அனைவரும் ஒரே ஒரு மொழியைத்தான் பேசினோம். அந்த மொழி தமிழ் மொழி" என்கிறார். இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அவர் சொல்வது உண்மையென்று எடுத்துக்கொண்டால் மனிதர்கள் மொழியை முதலில் பயன்படுத்த ஆரம்பித்த காலம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான காலம் தான் தமிழ் தோன்றியிருக்க வேண்டுமல்லவா?

அதன்படி தமிழின் வயது 2 லட்சம் ஆண்டுகள் ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது, இல்லையா.

அப்படியென்றால், "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி" என்று சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. (இந்த பூமியில் கல்லும் மண்ணும்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். அதனால் அதற்கும் முன்பான மூத்தக்குடி என்பது கொஞ்சம், இல்லை இல்லை, ரொம்பவே ஓவராகத்தான் தெரிகிறது)

நன்றி
லோகு வெங்கடாசலம்

No comments:

Post a Comment