Wednesday, April 6, 2016

The Power of Reading, Free Voluntary Reading (FVR)

எங்கள் டி டி கண்டிகை கிராமத்தில் அந்த காலத்தில் படித்தவர் அவர் மட்டும்தான். எல்லோருக்கும் கடிதம் எழுதுவது, வந்த கடிதத்தை படித்துச் சொல்வது, எழுதப் படிக்கத் தெரியாத ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு செய்தித்தாள் படித்துச் சொல்வது, எங்கள் கிராமம் மட்டுமன்றி சுற்றியுள்ள எட்டு கிராமங்களுக்கும் நல்ல நாள் குறிப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, வாஸ்து போன்ற எல்லாம் அவர்தான்.

அவரைப் பற்றி சாதாரண மக்கள் தெரிந்துக்கொண்டது இது.

ஆனால், இது ஒரு துளி மட்டுமே. அதற்கும் மேல்...

அவரிடம் 10 நிமிடங்கள் பேசினால் குறைந்தது ஒரு குறள், நீதிநூல், இராமாயணம், சங்க இலக்கியம் போன்றவற்றிலிருந்து ஒரு பாடலாவது சொல்வார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை அவருக்கு இருந்தது.

கிராமத்தில் நாடகத்தில் நடிப்பார். நாடகம் எழுதுவார். பாட்டு எழுதுவார். பள்ளியில் நடக்கும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றுக்கு அவர் எழுதிக்கொடுத்தால் முதல் பரிசு நிச்சயம்.

நான் தமிழைப் பள்ளியில் கற்றதைவிட அவரிடம் கற்றதுதான் அதிகம். எனக்குத் தெலுங்கு எழுதப் படிக்கவும் கற்றுக்கொடுத்தார்.

இவருக்கு இவ்வளவு திறமை வந்தது எப்படி என்று நாங்கள் அவரை வியப்போடு பார்ப்போம். இதில் அப்படி என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நியாயமான கேள்விதான்.

அவர் பள்ளிக்கூடம் சென்றதே மொத்தம் ஆறு மாதங்கள்தான்.

இப்ப சொல்லுங்கள். இது வியப்பானதுதானே? ஆமாங்க, நாங்களும் அவரை அப்படித்தான் பார்த்தோம்.

அவர் பிறவியிலேயே இந்த அளவு திற்மையானவராகப் பிறந்தார். இவருக்கு கடவுள் அருள் நிறைய இருக்கு ... இப்படியெல்லாம் நாங்கள் நினைப்போம். நானும் சில காலம் வரை இப்படித்தான் நினைத்திருந்தேன். இருந்தாலும் இந்த கேள்விகள் மனதின் ஒரு மூலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

அவருக்கு இந்த அளவு தமிழ் ஆர்வமும் திறமையும் வந்தது எப்படி? ஆறு மாதம் மட்டுமே படித்த அவர் நாடகம் எழுதுவது, பாட்டு எழுதுவது, தமிழ் இலக்கியங்களை சரளமாக கையாண்டது எப்படி? இவரது ஞாபகசக்தியில் கால் பங்கு எனக்கு இருந்தாலும் நான் இந்த மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ந்திருப்பேன். இன்னும் நிறைய படித்திருப்பேனே.

இதற்கான சரியான அறிவியல் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது. சமிபத்தில் Dr. Krashen அவர்களின் The power of reading என்னும் புத்தகத்தைப் படித்தேன். அதில் அவர்
Reading not only enhances knowledge, it also builds great language skill.
என்றும்
It is possible to build literacy competency entirely through reading. Not any reading, it is Free voluntary reading (FVR).
என்றும் சொல்லி இருப்பதைப் படித்தேன். இதை மேலும் படிக்க படிக்க இங்கு குறிப்பிட்டுள்ள நம் கதாநாயகன் தான் என் கண் முன் வந்துக்கொண்டே இருந்தார்.

ஆறு மாத பள்ளி படிப்புக்குப் பிறகு அவரை அவர் அப்பா மாடு மேய்க்கவும் கைத்தறி நெய்யவும் அனுப்பினார். மாடு மேய்க்கும் நேரத்திலும் வேலை முடிந்த ஓய்வு நேரத்திலும் மற்ற பிள்ளைகள் விளையாடுவதும் அரட்டை அடிப்பதுமாக இருக்க இவர் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்துக்கொண்டிருப்பார். படிப்பார், படிப்பார், படித்துக்கொண்டே இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் கிராமத்தில் நூலக அட்டை வைத்திருந்தவர் அன்று இவர் மட்டும்தான்.

Dr. Krashen மேலும் சொல்கிறார்:
Lots of reading improves writing skill.
ஆம், அவர் நிறைய படித்ததுதான் அவருக்கு நாடகம், பாட்டு, கதை, கட்டுரை, பேச்சு போன்றவை எழுத அதிகம் உதவியது என்று புரிகிறது. அவருக்கு அதிகம் உதவியது Dr. Krashen சொல்லும் Free voluntary Reading தான். இன்று பல ஆராய்ச்சிகள் மூலம் Dr. Krashen போன்றவர்கள் கண்டு சொன்னது அன்றே அவருக்குத் தெரிந்திருந்தது. அதை நன்றாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

கடைசி காலத்தில் கண்ணில் பிரச்சனை இருந்தபோது கண் பிரச்சனையைவிட படிக்க முடியவில்லை என்றுதான் அதிகம் வருந்தினார்.

கண்ணதாசன் அவர்களைப் பற்றி சொல்லும்போது  "கண்ணதாசன் இராமாயணம், திருப்பாவை போன்ற இலக்கியங்களை நிறைய படித்தார். அவர் பாடல்களில் இது நன்றாகத் தெரியும்" என்று என் நண்பர் சொல்வார். அதாவது நிறைய படிப்பது குறிப்பாக Free Voluntary Reading மொழி வளத்துக்கும், அறிவுக்கும், cognitive development-க்கும் அதிகம் பயன்படுகிறது என்பது தெளிவு.

மேலும் "அன்பு மகன் லோகுவுக்கு ..." என்று மிக அழகான அவரது கையெழுத்தில் எழுதிய எழுத்துக்கள் என் கண் முன் எப்போதும் தெரிந்துக்கொண்டே இருக்கிறது. இன்றும் என்றென்றும் என் கண் முன்னாலேயே இருக்கும்.

நன்றி
லோகு வெங்கடாசலம்

4 comments:

  1. Well said mama it's very true. Please add one more point - ஆசிரியரால் போட முடியாத கணக்குகள் கூட இவர் எளிதாக போட்டு விடுவார்.ஆசிரியருக்கு கணக்கில் ஏதாவது சந்தேகம் என்றாலும் இவரிடம் தான் கேட்டு வர சொல்லுவார்... Even Banu also got first price in school level competition for the song "Bharatha nattin kangal nala pagutharivula pengal.....I remember that day teachers all are appreciated banu and also asked who wrote and given:-)

    ReplyDelete
  2. கருத்தாழத்துடன் இனிய நினைவுகளையும் சேர்த்துள்ளீர். அருமை.

    ReplyDelete
  3. Replies
    1. இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சங்கர்.

      இந்த வலைப்பூவில் மொழிக்கல்வி பற்றி நான் கற்றுக்கொண்டதை பகிர்ந்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருக்கும்போது மற்ற கட்டுரைகளையும் படித்து உங்கள் மேலான கருத்தை பகிர்ந்துக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

      -லோகு

      Delete