Sunday, April 16, 2017

உயிர், மெய், உயிர்மெய்; அதுதான் தமிழ்!

மொழியை நாம் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்துக்கொள்ள பயன்படுத்துகிறோம். இந்த கருத்து பரிமாற்றம் என்பது பேச்சு வழியிலும் எழுத்து வழியிலும் செய்கிறோம். பேச்சு வழியில் பயன்படுத்த ஒலி, வார்த்தை, பொருள், வாக்கியம் போன்றவை இல்லாமல் அதை சரியாக பயன்படுத்த முடியாது. எழுத்து வழியில் பயன்படுத்த எழுத்து, வார்த்தை, பொருள், வாக்கியம், இலக்கணம் போன்றவை மிக அவசியம்.

எழுத்து வழக்கில் தமிழில் உள்ள எழுத்துக்களை உயிர், மெய், உயிர்மெய் என்று பெயரிட்டுள்ளார்கள். இது போல எழுத்துகளை பெயரிட்டவர்களின் அறிவுக்கூர்மையை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

எந்த உயிரினத்துக்கும் மெய்(உடல்) முக்கியம், அது வாழ உயிர் முக்கியம். உயிரும் முக்கியம் உடலும் முக்கியம். இவையிரண்டும் சேர்ந்து இருந்தால் தான் அந்த உயிரினம் செயல்பட முடியும்.

அதனால், தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு இப்படி உயிர் என்றும் மெய் என்றும் பெயரிட்டவர்களின் அறிவுக்கூர்மையை மீண்டும் யோசித்து பாருங்கள். இது போல வேறு எந்தெந்த உலக மொழிகளில் இப்படி பெயர் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

ஆங்கிலத்தில் எடுத்துக்கொண்டால் vowel என்றும் consonant என்றும் தான் சொல்கிறார்கள். Vowel என்பதற்கு உயிர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா? அதுபோலவே consonant என்பதற்கு மெய் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா? மேலும் Vowel-constant என்பதற்கு உயிர்மெய் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பார்த்தீர்களா?

பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே நம் மொழியை வளர்க்க உழைத்த நம் முன்னோர்களை நினைத்து மலைக்காமல் இருக்க முடியவில்லை.

அப்படியிருக்க நம் மொழியை அறிமுகப் படுத்தும்போது, ஆங்கிலத்தில் vowel என்றும், consonant என்றும், vowel-consonant என்றும் சொல்வது சரியா?

சரி என்ன செய்யலாம்? நம் மாணவர்களுக்கு முதலில் உயிர் என்றால் என்ன, மெய் என்றால் என்ன, உயிர்மெய் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுமளவுக்கு தமிழை சொல்லிக்கொடுத்துவிட்டு பிறகு இந்த எழுத்துகளை உயிர் எழுத்து என்றும், மெய் எழுத்து என்றும், உயிர்மெய் எழுத்து என்றும் சொல்லிகொடுக்கலாமே.

நன்றி
லோகு