Sunday, March 6, 2016

TPRS, CBI, FVR, and TBLT in class

HSCP 1 Conversation “B” - Cupertino Week 24

மார்ச் 6, 2016


இன்றைய பாடம் தோட்டம் பற்றி. பாடத்திட்டம் கேள்வி கேட்கும் உத்திகளை பயன்படுத்தச் சொல்கிறது. மாணவர்கள் பாடத்தில் பங்கேற்க வைக்க கேள்வி கேட்கும் உத்தி ஒரு நல்ல உத்திதான். கேள்வி கேட்கலாம் வாருங்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கவும். ஆனால், நான் இன்று கேள்விகள் உத்திக்குப் பதில் Task Based Language Teaching (TBLT) என்னும் உத்தியை பயன்படுத்த விரும்பினேன். மாணவர்கள் ஒரு தோட்டம் உருவாக்கி அதில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை விளையச் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இன்றைய வேலை.

இந்த வேலையைச் செய்ய அவர்களுக்குத் தேவையான தோட்டம் தொடர்பான மரம், பூக்கள், காய்கள், பழங்கள் போன்ற வார்த்தைகளை முதலில் பேசினோம். அடுத்த 100 களில் எண்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். வெறும் எண்களை மட்டும் சொல்லித்தருவதற்குப் பதிலாக சில கணக்கு உத்திகளைப் பற்றிப் பேசினோம். அதாவது x5*x5, xy*11 போன்ற கணக்குகளை எளிதாக செய்வது எப்படி என்கிற உத்திகளைப் பார்த்தோம். இந்த மாணவர்கள் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் என்பதால் இந்த கணித உத்திகளை விரும்பி கேட்டனர். அதோடு கொடுத்த கணக்குகளை ஆர்வத்தோடும் செய்தனர். கணக்கில் பதிலை சொல்ல முன் வந்தனர். பதிலை தமிழில் சொல்லவில்லையென்றால் அது தவறான விடையாக கருதப்பட்டது. அதனால் பதிலை விரைந்து தமிழில் சொல்ல சுய கட்டாயம் உருவானது. This is compelling. இதற்கு Content Based Instruction (CBI) என்னும் அணுகுமுறையை பயன்படுத்தினோம்.

முதலில் எண்களில் ஆரம்பித்து பின் தோட்டம் பற்றிய வார்த்தைகளைப் பார்த்தோம். பின் மாணவர்கள் தோட்ட வேலை ஆரம்பித்தனர். மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து 10 - 15 நிமிடங்கள் இதில் வேலை செய்தார்கள். தாளில் தோட்டம் உருவாக்கி, என்னென்ன காய்கறிகள், பூக்கள், பழங்கள் உருவாக்கினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு தோட்டத்தை உருவாக்கினார்கள். பின் அவர்கள் தோட்டம் பற்றி சொல்லி எப்படி பணம் சம்பாதிக்கப் போகிறார்கள் என்று விளக்கினார்கள்.

இரண்டு அணிகளும் நன்றாக செய்தார்கள். ஒரு அணி பண மரம் வைத்தனர். அவர்கள் அந்த மரத்தில் காய்க்கும் பணத்தை பயன்படுத்த திட்டமிட்டனர். இன்னொரு அணி பொய் பண மரம் வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் “காய்கறி திருட வருகிறவர்கள் அந்த பொய்யான பணத்தைப் பார்த்து உண்மையென்று நம்பி பணத்தை எடுத்துக்கொண்டு தோட்டத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்”. How creative this team is!

இந்த வகுப்பு வேகமாக முடிந்தது போல உணர்ந்தேன்.

தோட்டம் பற்றிய வார்த்தகளை கற்றுக்கொள்ள Task Based Language Teaching (TBLT) என்னும் உத்தியைப் பயன்படுத்தினோம். பின் ஒரு கதை நிகழ்ச்சி. இந்தப் பகுதிக்கு El Mono (ஒரு குரங்கு) என்னும் ஒரு ஸ்பானிஷ் கதையை பேசினோம். யூட்யூபில் El Mono by Senor Jordan என்று தேடவும். இதற்கு  TPRS என்னும் உத்தியைப் பயன்படுத்தினேன்.

கேள்வி கேட்கும் உத்தியை மாணவர்களின் புரிதலை அறிய வகுப்பு முழுவதும் பயன்படுத்தினேன்

இந்த வகுப்புகளில் வாரந்தோறும் 10-15 நிமிடங்கள் மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டும். இதற்கு Free Voluntary Reading (FVR) என்னும் உத்தியைப் பயன்படுத்தினேன். நம்மிடம் உள்ள தமிழோசை கதைப்புத்தகங்களை வகுப்பு கொண்டுவந்து அவர்களை ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து 10 நிமிடங்கள் படிக்கச் சொல்வேன். இதிலிருந்து கதையோ, பொருளோ, நீதியோ எதையும் யாரும் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விருப்பம் இருக்கிறவர்கள் மட்டும் சொல்லலாம். இந்த உத்தி மாணவர்களின் மொழிவளத்தை பெருக்க உதவுகிறது என்கிறார் க்ரேஷன் அவர்கள். தொடர்ந்து FVR உத்தியை வகுப்பில் பயன்படுத்துவோம்.

TPRS, TBLT, FVR, மற்றும் CBI போன்ற உத்திகள் நல்ல பலனை அளிக்கிறது என்று நம்புகிறேன். வகுப்பில் பொதுவாக பேசக் கூச்சப்படும் ஒரு மாணவன் இந்த குரங்கு கதையை 8 வாக்கியங்களுக்கு பேச்சுத்தமிழில் தொடர்ந்து சொன்னான்.

நன்றி
லோகு