Saturday, December 20, 2014

தமிழ்ப் பள்ளிகளின் நோக்கம்

தமிழ்மொழி சூழலிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் நம் பிள்ளைகள் நம் மொழியையும், கலாச்சாரத்தையும் மறக்கும் சூழலிலேயே வளர்கின்றனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானவை புலம்பெயர்ந்த இடங்களில் உள்ள மொழிச் சூழலே. இச்சூழலில் நம் பிள்ளைகளுக்கு தமிழைக் கேட்கவும் பேசிப் பழகவும் வாய்ப்புகள் மிகக் குறைவே.

அப்படியுள்ள நம் பிள்ளைகளுக்கு நம் மொழி, அடையாளம், மற்றும் கலாச்சாரம் மறக்காமல் இருக்க நம் தமிழ்ப் பள்ளிகள் செய்யவேண்டியது என்ன?

நமது முதன்மையான நோக்கம் நம் பிள்ளைகள் தமிழை வாழ்நாள் முழுதுக்கும் தக்க வைத்துக்கொள்ளவும், தமிழ் என் மொழி என்னும் உணர்வும் அவர்களுக்கு உண்டாக வேண்டும். ஒரு மொழியை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள நமக்குத் தெரிந்த ஒரெ வழி, அம்மொழியை தினமும் பயன்படுத்துவதே. அவர்கள் நம் மொழியை தினமும் பயன்படுத்த வேண்டும், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தமிழில் அடிக்கடி பேசவேண்டும்.

எனவே நமது முதல் நோக்கம் அவர்களை தமிழில் பேசவைக்க வேண்டியதே. தமிழில் பேசுவதை புரிந்துக்கொள்ளவும், நினைத்ததை தயக்கமின்றி பேசவும் பயிற்சிகளும் வாய்ப்புகளும் உருவாக்கித் தரவேண்டும். படிக்கவும் எழுதவும் வேண்டியது அவசியமே. ஆனால் அன்றாட வாழ்க்கையில் மொழியை படிப்பதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்துவதைவிட பேசுவதற்கே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். எனவே பேச்சுப் பயிற்சியை முதலில் அளிப்பதே சரியாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

இந்த பூமியில் பிறந்த மனிதர்களில் பலபேர் படிக்கவும் எழுதவும் தெரியாமல் இருப்பார்கள். ஆனால், மொழியை பேசுவதற்கு பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே நம் பிள்ளைகள் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரியாமல் கூட இருக்கலாம் ஆனால் பேச முடியாமல் இருந்தால் அவர்களால் மொழியை மறப்பதை நிறுத்துவது எப்படி?

இன்று பல வருடங்கள் தமிழ்ப் பள்ளியில் சென்று தமிழ்ப் படிக்கும் நிறைய பிள்ளைகள் தமிழைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்கிறார்கள், படிக்கிறார்கள், நன்றாக எழுதவும் செய்கிறார்கள். ஆனால், சரளமாகவும் தயக்கமின்றியும் தமிழில் பேச முடியாமல் இருப்பதையே காண்கிறோம். இதற்கு காரணம் என்ன? இவர்களுக்கு நாம் தேவையான அளவு பேசுவதற்கும் பயிற்சியையும் வாய்ப்பையும் தராமால் இருப்பது தானோ என்கிற கேள்வியும் எழுகிறது. மேலும் இந்த பிள்ளைகள் வாரம் ஒருமுறைதான் தமிழ்ப் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளியில் இருக்கும் ஒரு சில மணிகளில் மொழியை நிறைய கற்றுக்கொள்வதும் எளிதல்ல. அதோடு ஒரு வாரம் கற்றதை அடுத்த வாரம் பள்ளிக்கு வரும் போது மறந்தும் விடுகிறார்கள்.

பிள்ளைகள் ஐந்து வயது இருக்கும் போதே பள்ளிக்கு வருகிறார்கள். அந்த வயதில் குழைந்தைகள் மொழி கற்கும் இயந்திரம் (Language Learning Machine) என்கிறது அறிவியல் ஆய்வு. இந்த வயதில் அவர்களுக்கு மொழிக்கல்வியை சரியாக கொடுக்க வேண்டியது நம் கடமையாகிறது. எனவே மொழித்திறன்களான புரிந்துக்கொள்ளுதல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்றவற்றில் முதன்மையானதான புரிந்துக்கொள்ளுதல், பேசுதல் போன்ற திறன்களை முதலில் அவர்களுக்குக் கொடுப்பதே சரியாக இருக்கும்.

தமிழில் அவர்கள் பேசவேண்டுமென்றால் மொழித்தயக்கம் அவர்களுக்கு விலகவேண்டும். இந்த தயக்கம் விலக அவர்கள் ஆரம்பித்திலிருந்தே சிறுசிறு வார்த்தைகள் தமிழில் பேசிப் பழக வேண்டும். இதற்கு தமிழ்ப் பள்ளிகள் அவசியமான வழிகளை உருவாக்கித் தரவேண்டும்.

எனவே, தமிழ்ப் பள்ளிகள்
  • பேச்சுத்திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டங்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
  • பேச்சுத்தமிழில் பேசிப்பழக பயிற்சியளிக்க வேண்டும்.
  • ஓரளவு பேச ஆரம்பித்தபின் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுக்க வேண்டும்
நன்றி
லோகு

No comments:

Post a Comment