Saturday, December 20, 2014

மொழித்திறனா மொழியறிவா? (Language Skill or Literacy Skill)

நாம் தமிழ்ப் பள்ளிக்கு சென்றபோது நமக்கு அ, ஆ, இ, ஈ என்றும் அம்மா, ஆடு, இலை, ஈக்கள்... என்றும் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில வகுப்பிலும் அதுபோலவே A, B, C, D... என்றும் A for Apple, B for Boy, C for Cat, D for Dog என்றும் சொல்லிக்கொடுத்தார்கள்.

நமக்கு அ, ஆ, இ, ஈ என்று சொல்லிக்கொடுத்தது சரியே. ஏனென்றால் நாம் தமிழ்ப் பள்ளிக்கு செல்லும் முன் தமிழில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தமிழில் நன்றாக பேசினோம். பிறகுதான் அ, ஆ, இ, ஈ என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

நமக்கு ஆங்கில வகுப்பில் A, B, C, D என்று ஆரம்பித்தது சரியா என்கிற கேள்வி உண்டாகிறது. ஆங்கிலம் தாய்மொழியாக உள்ள நாடுகளில் இப்படி ஆரம்பிப்பது சரியே. ஆனால், ஆங்கிலத்தை அயல் மொழியாக படிக்கும் இடத்தில் இப்படி ஆரம்பிப்பது சரியில்லை. காரணம், நான் ஆங்கிலத் தேர்வுகளில் நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் வாங்குவேன். ஆனால், என்னால் ஒரு வாக்கியம் கூட பேச முடியாது. கல்லூரி படிப்பை முடித்தபின் கூட ஆங்கிலத்தில் ஓரளவுக்குக் கூட பேச முடியாத நிலையிலேயே இருந்தேன். என்ன காரணம்?

ஆங்கில வகுப்பு எழுத்துக்கள், இலக்கணம், reading comprehension, இலக்கண விதிகள் என்றுதான் இருந்ததே தவிர ஆங்கிலத்தில் பேசுவதை புரிந்துக்கொள்ளவும் பேசுவதற்கும்  வாய்ப்பு இல்லாமலே இருந்தது.

 மொழித்திறன்கள் என புரிதல், பேசுதல், படித்தல், மற்றும் எழுதுதல் என்று உள்ளன. நாம் முதல் மொழியைக் கற்றுக்கொள்ளும் போது முதலில் நம் பெற்றோர்களும் உறவினர்களும் பேசுவதை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தோம். பிறகு சொல்ல நினைத்ததை மழைலையாகவும், ஒரு சில சிறு வார்த்தைகள் மூலமும், பிறகு சிறிய வாக்கியங்கள் என்று படிப்படியாக பேச ஆரம்பித்தோம்.

இந்த புரிதல் மற்றும் பேசுதல் திறனுக்கு மொழித்திறன் (Language Skill) என்று சொல்வார்கள்.

அதற்குப் பின் தான் பள்ளியில் எழுத்துக்கள், படிக்க, எழுத, இலக்கணம் என்று மொழியைபற்றிய அறிவை வளர்த்துக்கொண்டோம். இது (மொழி அறிவு) Literacy Skill.

 புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மொழித்திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் பிள்ளைகளுக்கு தமிழில் பேசுவதை புரிந்துக்கொள்ளவும், பேசவும் பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்கள் ஓரளவுக்கு பேச ஆரம்பித்த பின் எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு எளிமையாகவும் இருக்கும், தமிழ் அவர்கள் மனதில் நிரந்தரமாகவும் இருக்கும்.


மொழியறிவுக்கும் மொழித்திறனுக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் கார் ஓட்ட விரும்புகிறீர்கள் என்று நினைத்துக்கொள்வோம். உங்களுக்கு கார் பற்றியும், அதன் பாகங்கள் பற்றியும், கார் எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும், கற்றுக்கொடுத்தால் போதுமா? கார் எப்படி ஓட்டுவது என்பதை புத்தகங்கள் மூலமும் படங்கள் மூலமும் மட்டும் சொல்லிக்கொடுத்தால் போதுமா?

அல்லது, உங்களை காரில் உட்காரவைத்து அதை எப்படி இயக்குவது, எப்படி ஓட்டுவது, எப்படி திருப்புவது என்று உண்மையில் பயிற்சி அளிக்க வேண்டுமா?

முதலில் சொன்னது மொழியறிவு. பின்னால் உள்ளது மொழித்திறன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். எனவே கார் ஓட்டுனராக செயல்பட காரில் உட்கார்ந்து ஓட்ட பயிற்சி பெறுவதுதான் முக்கியமே ஒழிய அதைப் பற்றி அதுப் பற்றி எவ்வளவு விரிவாக தெரிந்துக்கொண்டாலும் அது எதிர்பார்த்த பலனை அளிக்காது.


எனவே தமிழ்ப் பள்ளிகளில் ஆரம்பித்தில் சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் அவர்களுக்கு புரியும்படி வகுப்புகள் வைத்துக்கொள்வோம். Krashen says the speaking skill will emerge after they are given enough comprehensible input. அதற்குப் பின் அவர்களுக்கு பேச வாய்ப்பையும் பயிற்சியையும் தருவோம். இதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். அதற்குப்பின் மொழியறிவுக்கல்வி கொடுப்போம்.

நன்றி
லோகு

No comments:

Post a Comment